Saturday, October 24, 2009
வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
தாயகமூச்சு எமக்கில்லையா?
ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன?
உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக.
நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை - எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது... கூடவே கூடாது.
முற்றத்து மணற்பரப்பில்
முழுமதியின் எழிலொளியில்,
சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி,
அடிவளவு மூலையிலே படர்ந்த
முல்லைச் சொதி மணக்கும்
கவளச் சோறெண்ணி,
ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி,
பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே....
விட்டுவிடுவோமா?
தாய்நிலத்தில் ஏறி நின்று அந்நியன் கூத்தாட
வாயொடுக்கி, மெய் நடுக்கி விதியென்று கிடந்திடவோ?....
புலம்பெயர்ந்து கிடந்தாலும் புலன் மாறக்கூடாது.
வலியென்று துடித்தாலும்,
'அம்மா" என்றழைத்து விழுந்து புரண்டாலும்
எமைத் தாங்கிப் பிடிக்கின்ற தாய்மடியைத்
தவிப்பெய்த விட்டிடவோ....
தமிழச்சாதியாய் தரணிக்குள் பிறப்பெடுத்தோம்?
வாகை சூழ்ந்திருக்கும்,
வன்னிமேனியிலே சோகம் படர்ந்திடுமோ?
வாயாரத் தமிழ் தொடுத்து வல்கவிகள் நல்கும் கவிமுரசுகளே!
காலம் எம் காலடியில் கைகட்டி நிற்கிறது.
வாழ்வை வனைய வல்லமைபூட்டி
எழுதுகோல்கள் எழுந்துதான் ஆகவேண்டும்.
இது காலக்கட்டளையும் கூட..
ஆவி துடித்திருக்கும் விழுதுகளின் ஓரவிழிக்கசிவில்
தாயை மீட்கின்ற பாதிப்பலமிருக்கும் சேதியைக் கூவி முழங்குக.
நிமிர்ந்த தானை செருக்கோடு தலைவன் வழி தொடருகையில்
மேதினி வாழ் தமிழின் போர் முரசங்கள்
மேனி நுடங்குதல் ஆகாது.
சோகச் சுமை ஏந்தலும், ஓர்மக்குரல் அடைத்தலும்
எழுதுகோல் வல்லமைக்கு இழிவல்லவா...
வல்லமை நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.
முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.
போர் மூசிய பேய்க்காற்றை எதிர்கொள்ளும்
பலம் தர நாமுள்ளோம்.
அஞ்சற்க....என தாயக உறவுகள் நோக்கி
ஆயிரமாயிரம் கவி படைத்து எழுக எம் கவிஞர்களே.
இன்று,
காலக் கட்டளை ஈழத்தமிழரின் திறவுகோல்கள் அற்ற
இதயவாசல்களையும் இடித்துப் பெயர்த்துளது.
பழி சூழும் நிலை எங்கள் பரம்பரைக்கு வந்திடுமோ என
இதுவரை காலமும் விழிமூடி நடித்தோரும் வெம்பி எழுந்துளர்.
உப்புக் காற்றுரசும் ஊர்மடியின் நினைப்பூற,
நேற்றுவரை செக்கிழுத்தோரும் சீற்றத்தில் கனல்கின்றர்.
அள்ளிப்பிடித்திருக்கும் ஆவி ஓய்ந்தால் கொள்ளிக்குத்தன்னும்
குலந்தழைத்தமண் வேண்டுமென சொல்லித் துடிக்கின்ற
சொந்தங்களும் எழுந்துளர்.
பள்ளிக் காலத்தில் பதிவிட்ட சித்திரத்தை
சில்லுருட்டி விளையாடிய செம்பாட்டுப் புழுதிமண்ணை
கல்லுக்குத்தி வைத்த தேர்முட்டி மூலைகளை
எண்ணி மகிழ்வோரும் எழுச்சியுற்று விரிந்துள்ளர்
எனும் சேதிகள் எங்கள் சொந்தங்களைச் சென்றடைய வேண்டும்.
வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.
முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.
நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை - எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது... கூடவே கூடாது.
மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறு எமக்குண்டு.
விழுகை என்பது விதிப்படியும்
எழுகை என்பது வினைப்படியும்
நிகழ்ந்தே ஆகவேண்டும்.
நேற்றொரு நாள்
சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது
கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு
இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம்
விடுதலைத் தழலில் வெந்து போயின.
சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.
இந்தியத்தை விட்டு
காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது.
இனத்தின் நித்திய வாழ்வுக்கு
நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்
சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.
பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி
தோற்றதன் எதிரொலியை
ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.
மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.
ஒப்பாரியின் உள்ளொலியில்
பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.
கால நெருப்பை ஏந்திய கண்களே
காவல் தெய்வங்கள் ஆயினர்.
அடைக்கலம் தந்த உறவுகளே
ஆற்றல்களையும் வழங்கினர்.
இன்னலைச் சுமந்த இருப்புகளே
ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.
முகாரிகளை இசைத்தபடியே
புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.
பிணம் புழுத்த வீதிகளிலேயே
பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.
மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி
சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.
எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்
எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.
இன்றைகள் மட்டுமேன்....
துருவ முனைகள் வரைக்கும்
உறைந்து கிடக்கிறது மூளா நெருப்பு!
பூபாளத்தை மறந்து புல்லாங்குழல்கள்
முகாரிகளையே முழுமை என்கின்றனவே!!!
ஒலியை இழந்தால்
பறைக்குப் பெருமையில்லை
பாதி வழியில் நின்று விட்டால்
பயணத்தில் முழுமையில்லை
விதியென்று ஓய்ந்து விட்டால்
மதியிருந்தும் பலனில்லை
விழல் என்று முடிவெடுத்தால்
விடுதலைக்கு இடமில்லை
நித்திய வாழ்வுக்காய்
நிம்மதியைக் கேட்ட இனம்
சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது
காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது
மாற்றமே இல்லாதது மண்மீட்பு.
மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்
தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்
கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்
காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.
மீண்டும்…..
கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு.
குப்புறக்கிடந்தால் சுவாசமே சுமைதான்
படுக்கையில் கிடந்தபடி
பாதை கேட்காதே
எழு….. உடல் முறித்து,
பத்தடி நட.
பாதை தெரியும்.
குப்புறக் கிடந்தால்
சுவாசமே சுமைதான்.
திரும்பிப் பார்.
விடுதலைக்காக கடந்த
தணற்காடுகளும், சதுப்பு நிலங்களும்
பார்வையில் புலப்படும்.
தணற்காடுகளில் தீய்ந்தபோது
நெஞ்சம் வேகியது
சதுப்பு நிலங்களில் புதைந்தபோது
சலனம் ஆடியது.
மீள எழவில்லையா?
களத்திலேயே மீண்டெழுந்த
உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்?
போராட்டக்களம் மாறியிருக்கிறது.
இப்போது சூறாவளி அவ்வளவே.
ஒட்டுமொத்த இன அழிப்பை
உலகம் கணக்கெடுக்கிறது.
துயர் கொல்லுதென்று
நீ முடங்கிவிட்டால்
இழப்புகள் கூட
மௌனித்துப் போகும்.
அழுவதாகிலும்...
அம்பலத்தில் நின்று அழு.
இது உனக்கு மட்டுமான வலியல்ல
நம் இனத்திற்குத் திணிக்கப்பட்ட பெருநோ.
நீட்டிப் படுத்திருந்தால் நீதி கிடைக்காது.
எத்தனை பெரிய துயரில் இருக்க
இரக்கமில்லாமல் எழுதுகிறாய்
இழந்திருந்தாலே உனக்குத் தெரியுமென்பாய்.
முள்ளிவாய்க்காலில் மட்டுமா இழப்பு?
முள்ளு வேலிக்குள் தொடர்ந்தே செல்கிறது.
உருகும் விழிநீரில் நீ புதையுண்டால்
பெருகும் துயர் தீர்க்கப்
போராடுவது எப்படி?
விழி நீரை விரட்டு.
வேதனையை உரமாக்கு.
எழு தீயில் ஒளியேற்று.
ஓர்மத்தை நிறமாக்கு.
உயிருக்கு ஆணையிடு.
இவ்வளவும் போதும்.
உணர்வாய். நீயே வழிகாட்டி.
பொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனே! உன்னை இனி நானே பாடுவேன்
கண்ணெதிரே கலையுமா கனவு?
மண்ணெனவே உதிருமா மனது?
நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம்
ஒப்பேற முன்னரே உருகியா போகும்?
இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட
மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை?
இது காலச்சுழி
சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது.
சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும்.
தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும்.
நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.
மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும்.
மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்.
உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும்.
இன்றைய பொழுதுகள் எமக்கானவை.
ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர்
முக்காற்சுற்று முடித்துவிட்டது.
சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு
பின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர்.
காது கொடுக்காதே.. கலங்கிப் புலம்புவாய்.
நம் கையில் வாழ்வு வசப்பட்டே ஆகவேண்டும்.
மாவீரத்தோள்கள் சுமந்த வரலாற்றை
முனை கூர்த்தி நகர்த்தியே தீரவேண்டும்.
ஆழக்கிணறு வெட்டி ஊற்றுவாயை அண்மித்துவிட்டு
உடல் நோகுதென்று உடைந்து போகக் கூடாது.
வெம்பிச் சோர்தல் வேதனையைத் தீர்க்காது.
என்ன இருக்கிறது?
எல்லாம் துடைத்தழித்து நகைக்கிறது பகைமுகம்.
உயிர்கூடு ஒன்றுதான் மீந்துபோய் உள்ளது.
அச்சப்பட்டதற்காய் அங்கெவரும் காப்பாற்றப்படவில்லை.
அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளர்.
உறவுகளைத் தினம் நினைத்து நீ உக்கி கிடப்பதனால்
உந்தி எழும் வல்லமையின் உறுதியை தொலைத்துள்ளாய்.
கண்ணுக்குத் தெரியாமல் பகை உன்னைக் கட்டிப்போட்டுளது.
மெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு.
புலத்திற்குள் பொருந்திக் கொள்.
புலன் தெளிவுறு.
உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு
எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு.
கால எழுதியிடம் புதுக் கணக்கை திற.
ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு.
ஏழ்புரவி ரதத்தினிலே எழும் தேவன்
பஞ்சபூதங்களாய் பலவழிகள் திறந்துள்ளான்.
அவன் ஆசி பெற்ற பெரும் யாகமிது.
அழிவுற்றுப் போகாது.
பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!
உன்னை இனி நானே பாடுவேன்.
அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த
என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை
உன்னை இனி நானே பாடுவேன்.
என்வேர் மடியைக் கிழிந்துவதம் செய்யும்
கொடும் பகையே உனை எதிர்க்க நானே கோலோச்சுவேன்.
விழுதனைத்தும் பிணைத்து, வேர்நிலத்தில் ஆழப்படர்த்தி,
மீண்டெழும் மிடுக்கை மிகைப்படுத்துவேன்.
புலம்பெயரிதான் இருப்பினும் என் பொல்லாப் பொறியின்
கூர் உனை பொசுக்கும்.
பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!
உன்னை இனி நானே பாடுவேன்.
அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த
என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை
உன்னை இனி நானே பாடுவேன்.
நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும்...
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். இன்னும் முன்னிலும் அதிகமான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, பட்டிகளுக்குள் முடக்கப்பட்டதான வாழ்வு???? வல்லாண்மைகளின் பெருவிருப்பு சிங்கள் இனவாத முகங்கொண்டுள்ளதை இன்றைய நாட்கள் உணர்த்தியபடியேதான் நகர்கின்றன. நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது. பார்த்திருங்கள் மடுவினில் தேங்கும் தாயக மீட்பலை மலைகளைத் தகர்த்து எழும். நேற்றைய நாட்களின் இவ்வரிகளை மீண்டும் மீண்டும் மீட்பித்து எதுவரை நாங்கள் உலகிற்கு மதிப்பளித்தோம் என்பதை பறை சாற்றியபடியே தடுக்கும் சக்திகள் அனைத்தும் உடைப்போம். இது தாயை மீட்கும் யாகம் அணையாது.
Fri, 03/11/2006
அழைக்கின்றீர்கள்.... மதிப்பளிக்கிறோம்....
மனிதம் செத்திருக்கும் அனைவரிடமும்
இன்னும் மானுடத்தை எதிர்பார்த்தபடி....
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி....
கரங்களோடு எங்கள்...
கண்ணீரையும் கட்டுப்படுத்தி...
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
எம் உறவு...
எம் வீடு...
எம் ஊர்...
எம் தேசம்..
எங்களுக்கானதை எம்மிடம் சேர்க்க
ஆவன செய்ய உங்களால் இயலுமா?
எங்களை நாங்களே காத்திடத் துணிந்ததை
பயங்கரவாதப் பட்டியலில் இடுகிறீர்!
நசியுண்ட எறும்பும் தனைக் காக்கக் கடிக்கும்
அது உங்கள் பார்வையில் பயங்கரவாதமா?
உயிர்வலி எங்களுக்கு...
உணர்வுகளைத் தூக்கிலிட்டு
எங்கள் சாவிற்கு...
எமனுக்கு வரவெழுத எமக்கென்ன தலைவிதியா?
மறுபடியும், மறுபடியும் மரணத்தின் ஓலம்தான்
மண்ணிடையே எமக்கான விதியாக்கப்படுகிறதே.
கண்ணிருந்தும் குருடான கதை உங்களதா?
உலக நாடுகளே!
உங்கள் எவராலும் விதி மாற்ற முடிந்ததா?
தடை போட்டீர்கள்..
காரணக் கதைகள் ஆயிரம் உரைத்தீர்கள்.
அல்லைப்பிட்டி, வங்காலை, வல்லிபுனம், சம்பூரென
எள்ளி நகைக்கிறதே உங்கள் காரணங்கள்
அவை உங்களுக்குப் புரிகிறதா?
வாழ்வுக்காய் எங்கள் போராட்டம்
கொடிய கந்தக நெடியிடையே எம் வாழ்வோட்டம்
புனர் வாழ்வும் முடக்கப்படும் பூமியிலே
ஏதிலிகளாய் எம் வாழ்வும் தொடரும்
புரிகிறதா?......
அல்லது புரியாமலே இன்னும்
உண்மையொளி காணாக் குகையில்
இருள் மூடிக் கிடக்கின்றீர்களா?
கிழக்கு முகம் கறுப்பதில்லை
காலதேவன் கிறுக்கலிலே
சூரியன் இருண்டதில்லை.
கோல விளக்கொளியில் கூறுகெட்ட வாழ்வெமதல்ல..
கந்தகப் பிழம்பிடையே.. களமாடும் புதல்வர்களைக்
கொண்டெழுந்ததே எமது வாழ்வு.
திசைவெளிகள் எங்கெனும் இசைவாக்கம் என்பது
எம்மினத்தின் அசையாத வாழ்வுக்கான தவம்.
உயிரெடுத்து உரம் தொடுத்த
எங்களின் தாயகத்து மண்மீட்பை...
ஆதிக்க கூப்பாடும், ஆலகால விடமும்
பாதிக்க முடியாது
ஆதலால்....
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
உயிர் வலிகளை எடுத்துரைக்க...,
உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி....
கரங்களோடு எங்கள்...
கண்ணீரையும் கட்டுப்படுத்தி...
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். இன்னும் முன்னிலும் அதிகமான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, பட்டிகளுக்குள் முடக்கப்பட்டதான வாழ்வு???? வல்லாண்மைகளின் பெருவிருப்பு சிங்கள் இனவாத முகங்கொண்டுள்ளதை இன்றைய நாட்கள் உணர்த்தியபடியேதான் நகர்கின்றன. நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது. பார்த்திருங்கள் மடுவினில் தேங்கும் தாயக மீட்பலை மலைகளைத் தகர்த்து எழும். நேற்றைய நாட்களின் இவ்வரிகளை மீண்டும் மீண்டும் மீட்பித்து எதுவரை நாங்கள் உலகிற்கு மதிப்பளித்தோம் என்பதை பறை சாற்றியபடியே தடுக்கும் சக்திகள் அனைத்தும் உடைப்போம். இது தாயை மீட்கும் யாகம் அணையாது.
அரவி அரவித் தகிக்கும் சுகிப்பில் இரைமீட்டிகள்
செக்கில் கட்டிய மாடுகள் சுற்றின.
போராட்டம் முடிச்சவிழ்த்தது.
பழக்கத்திலிருந்து விடுபடாமல்
செக்கையே திரும்பத் திரும்பச் சுற்றின.
முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை
உணர்த்தியபடியே போராட்டம் வளர்ந்தது.
அருகாமையில் குண்டுகள் வீழ
சிதறித் திக்கெட்டும் பிரிந்தவை
பசுமை வெளிகளையும்,
பனிபடரும் குளுமை தேசங்களையும்
தம் வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டன.
ஈழச்சமூகத்திலிருந்து அகற்றப்பட்ட ஒன்றை
இருப்பதாய் உரைக்கும் பழையவை.....
புலம்பெயர்விலும்
முப்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பேசும்
வழமையில் இருந்து மாற்றமடையாது
முடிச்சுகளுக்குள் தத்தம் கழுத்துகளை நுழைத்து
அரவி அரவித் தழுவும் சுகிப்பில் திளைத்தபடி
இன்னும் இரைமீ்ட்கின்றன.
நாகரீக வெளிகளின் மெருகேற்றலில்
செக்கிழுப்புகள் பரவுகின்றன.
சரி,......
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுங்கள்.
அத்தனை பேரும் உத்தமர்தானா?
அடுத்த தலைமுறை கேட்கும்.
ஒப்பாரிக்குமேல் ஒன்றேதும் உண்டென்றால்..
கண்ணீர், செந்நீர்
ஒப்பாரி, நடைபிணம்
காட்சிப்படுத்தலின் உச்சம்.
தென்னிலங்கைத் தெருக்களில்
இனவாதப் பேய்களின் பிணக்கூத்து.
விழி பறிக்க ஒரு கூட்டம்
வீதியிலே மொழி கேட்டு
முடமாக்க ஒரு கூட்டம்.
கடை நொறுக்க ஒரு கூட்டம்
குடி பறித்துக் களவாட ஒரு கூட்டம்.
பெண்மை சீண்ட ஒரு கூட்டம்.
பின் புணர்ந்து பிணமாக்க ஒரு கூட்டம்.
தார் கொதியத்தில் குழவியிட,
கொதிக்கும் குறியிழுக்க,
கொங்கைகள் அறுத்தெறிய…
மிதிக்கும் காலடியில்
மென் மழலை துடித்தலற,
தாய்மையிடும் ஓலத்தையும்
இரசிப்பதற்கு ஒரு கூட்டம்.
நிர்வாணப் படுத்தியதும்
உயிர்விதையில் மிதித்து
ஓலமிட வைத்ததுவும்
பெற்றவன் உற்றவன்
பெற்றெடுத்த மக்களின் முன்
எத்தனை பெண்களை?
எத்தனை மிருகங்கள்?
ஓர் உயிர் சிதைக்க
ஒரு நூறு இனவாதியர்
பேதைத் தமிழனைப்
பிய்த்தெறிந்த வரலாறு.
ஒப்பாரிக்கு மேல்
ஒன்றேதும் உண்டென்றால்
அதுவே அன்றெம் தமிழர் நிலை.
புலம் பெயர் உறவுகளே!
தமிழர் விழி பறிப்பால்,
கொதிக்கும் குறியிழுப்பால்,
பெண்மையுற்ற பெரு வலியால்,
பிஞ்சுகளின் உயிர்ப் பிசைவால்,
மொழியுற்ற கலியால்,
இனவாதப் பிணக்கூத்தால்,
உடல் பிய்ந்து துடிதுடித்து
உயிர் துறந்த உறவுகளால்
வாழ்வெடுத்து வந்தவர் நாம்
இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.
வாழ்வெடுத்து வந்து விட்டு
வலி மறந்து போனோமா?
ஆள்பவரில் மாற்றமில்லை
மாள்வு ஈழத்தமிழர் மேல்
மாலையிட்டே நிற்கிறது.
வாழ்ந்த மண், சூழ்ந்த கலி
வந்த மண்ணில்ச் சொல்லி
ஆழ்ந்த துயர் களை!
அகிலம் என்னும் கரம் பற்றி
அன்னை விழி துடை!
இனவாதப் பேய் தின்ற
உறவுகள் சாந்தி பெற
இனம்வாழ உடன் இயங்கு!
இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.
எத்தனை ஆண்டுகள்?
எத்தனை வாதைகள்?
இன்னும் செத்தவர் பட்டியல்
தொடர்கதை ஆகுது.
குடிமனை இழப்பதும்,
குறவர்போல் அலைவதும்
உறவுகள் சரிவதும்,
உதிரத்தில் குளிப்பதும்,
கருணையே இல்லையா?
சர்வ தேசங்களே!
விழி அகலத் திறந்தெங்கள்
வேதனையைப் பாருங்கள்!
மெய் அறிய வாருங்கள்!
இனவாதம் குதறும் எம்
வாழ்வியலை கணக்கெடுங்கள்!
போர் எங்கள் கைகளிலே
திணிக்கப்பட்ட நிலை உணர்வீர்!
தடை என்னும் தராசினிலே
தாழ்ந்திருக்கும் தவறறிவீர்!
ஒப்பாரிக்கு மேல்
ஒன்றேதும் உண்டென்றால்
அதுவே இன்றுமெம் தமிழரின் நிலை காண்பீர.;
இது நினைவுபடுத்தலின் உச்சம் மட்டுமல்ல
நிகழ்வுகளின் வலி உரைப்பு.
பந்தயக்குதிரைகள் ஓடிக்களைக்கட்டும் இரண்டு பரிகளில் கால்கள் பரப்பிய ஒற்றைப்பாகன் இடறி விழும்வரை காத்திருப்போம்.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது.
வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன.
எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது
எதுவரைக்கும் தான் முடியும்?
எழும்போது உலகம் தெளியும்.
வளவுக்குயில்கள் குரலிழந்து போயுளன.
வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது.
உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள்
கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன.
முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன.
மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன.
செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள்
நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென
வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது.
எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன.
சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது.
ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட பெருஞ்சனம்
பட்டிகளில் அடையுண்டு,…. மானுடம் மக்கி,
மண்தின்னக் கிடக்கின்றர்,
கந்தகப் பெருமழையில் கலங்காத பெருநெஞ்சுகள்
கந்தலில் நைந்து கசங்கிக் கிடக்கின்றன.
விடுதலைக்கு முரசறைந்த மானிட வாழ்வு
பேரரசுப் போட்டிகளில் புண்பட்டு உழல்கிறது.
ஒரு சொட்டு நீருக்காய் ஓர்மச் சினம் ஒறுத்து
உறவுக் கொடியெல்லாம் மெய் கூனித் தவிக்கின்றர்
நெஞ்சக் கூட்டறைக்குள் பொத்திவைத்த அத்தனையும்
பித்தச்சுனை வெடித்த எரிமலையில் கரிகின்றன.
ஐ.நா அம்பலத்தில் அம்மணமாய் ஆடியதில்
இந்தியப் பெருநாடே இறுதிச் சுற்றில் நிலைத்தது.
இவற்றிற்கெல்லாம் தீர்வெழுத திராணியற்றதான
இயலாமை நடிப்பில்
ஒஸ்கார் விருதை உலகமே பெற்றுளது.
மனித நேய ஆடை மதிப்பற்றுக் கிடக்கிறது.
இனி ஒரு விதி செய்தல் எமக்குரித்தாயுளது.
இனத்தைக் கருவறுத்தால்… ஈழம் பிறப்பற்றுப் போகுமோ?
அனைத்தும் இழந்திழந்தே அன்றும் வலுவுற்றோம்.
இனத்தை கருவறுத்தால் இன்னும் பெருக்கெடுப்போம்.
அகழான்கள் குடைந்தெடுத்தால்…
ஆடுகால் பூவரசும் அடிசெத்து போயிடுமோ?
விழுதுகள் இறங்கும்.,
குடைந்த இடமெல்லாம் வேர்பரப்பும் வேகத்தில்
அகழான்கள் வெளியேறும்.,
இல்லை அடியினில் நசுங்குண்டு சாகும்.
இனத்தை அழிக்க துணைபோன கோட்டான்களுக்கு
இந்திர விழா முடியத்தானே இழவுகள் புரிய வரும்.
கனத்த பெரு வெளியின் கானலை நம்பி
இருக்கும் எச்சிலையும் இழுத்துத் துப்பட்டும்.
அறுபது ஆண்டுகளாய் பட்டதெல்லாம்
இணைத்து இன்னும் ஆறுமாதத்திற்காகினும்
அவலத்தைச் சுமந்துதான் ஆகவேண்டும்.
பந்தயக் குதிரைகள் ஓடிக் களைக்கட்டும்.
இரண்டு பரிகளில் கால்களைப் பரப்பிய
ஒற்றைப் பாகன் இடறி விழட்டும்
இல்லாவிடின்
ஒரு புரவி தடம் மாறட்டும்.
காட்சிகள் மாறுகின்ற வேளைக்காய்
இன்னும் கொஞ்சம் வலிகளில் மூழ்குவோம்.
புதிதென்றால் அல்லவா
நாங்கள் பொலபொலவென்று அழுது தீர்க்க……
பழகி விட்டது.
தேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின் மூச்சு ஓசோன் ஓட்டையாக..
தேடற்கவியின் உழல்வை
இதயக்குழி உள்வாங்க
உயிர்ப்பின் மூச்சு
ஓசோன் ஓட்டையாக…
காலம் எழுதியின் கவனப்பிழை
கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்…
தரித்த குளவியின் பாதி உடல்
சீழ்கட்டிப் போய் சிகிலமாக…
பிணவாடை, கொள்ளை கோமாரி
ஐயோ….
பச்சை உடம்புக்காரி படுக்கையிலே….
காலம் எழுதியை அழைத்து வருவீர்.
வனையும் சூட்சுமத்தை வசீகரித்து
கால் செருப்பாக்கி
கொப்பளிக்கும் கானல் வெளியில்
கிடந்துழலும் மனிதர்களின்
வேதனையை உணர்த்த வேண்டும்.
பாழும் உலகிடையே வாழக் கேட்டு
வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு
தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று.
த்தூ…..
மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து
மணிக்கணக்காப் பேசுக.
எங்கே எவர் தலையில்
குண்டுகளைக் கொட்டலாம்?
இன்னும் குற்றுயிராய், குலையுயிராய்
துடிதுடிக்க வதைத்தழித்து
மந்தைப் பட்டிக்குள் போட்டு மேய்க்க
எந்தச் சனியனுக்குத் திட்டமிருக்கோ
அங்கின போய்க் கொஞ்சிக் குலவுக.
பொட்டைடைக்கண்களுக்கு
அசோக மலர்களிடம் அடங்காத ஆசையோ?
இத்தொப்பி எவருக்கென்று
தொல்பொருள் ஆராய்ச்சி தேவையில்லை
காலம் எழுதிதான் கவனப்பிழை விட்டானென்றால்
கந்தறுந்த மனிதமுமா கண் கெட்டுக் கிடக்கிறது?
கோல விளக்கொளியில் கோலோச்சி வந்த மக்கா!
ஆட்சிக் கதிரைக்கு ஆளாய் பறந்து
அன்னை தமிழுக்கு ஆலவிசம் தந்தனையே….
போதுமப்பு உன் நடிப்பு.,
எல்லை தாண்டி வந்த கேடி
உயிரறுத்து துவசம் செய்தான்.
பள்ளி முதல் பங்கர்வரை
பாழ்படுத்திப் போனான்.
உயிர் கிடந்து உழன்றதனால்
ஊனத்துடன் அழுதலைந்தோம்.
விட்டானா?...
கந்தகக்குண்டுகளில் நஞ்சிருத்தி
கொன்றொழித்தான்
சந்ததி முழுவதையும்
சகதிக்குள் புதைய வைத்தான்.
மந்தைகளாய் அடைத்துள்ளான்.
அவன் சமபந்தி வைப்பானாம்.
சந்தர்ப்பம் பார்த்து சர்ப்பங்கள் ஆடுகின்றன.
வெந்து கிடக்கிறது உள்ளம்.
மீளத் தெளிவு
மிடுக்கெடுத்த நிமிர்விற்காய்
காலமுட்கள் கைநீட்டுகின்றன.
உயிர்த்தெழுக.
ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது
அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை
மீட்பர்களற்ற வதைமுகாம்கள்
மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட
அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.
பசி மயக்கத்தில் கேட்பாரற்று
உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில்
சருகாகின தனிமைக் கூடுகள்.
அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள்
உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கின்றன.
கூடி அழ ஆளின்றி
மானிட மரணங்கள் மலினப்படுகின்றன.
தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து
சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது.
ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி
பெண்மை கறையுற்று நனைகிறது.
மறைப்புகள் அற்ற திறந்த வெளி
இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறது
அகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை
அடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன.
நைந்த ஆடையின் கிழிசல்களுக்குள்ளால்
வதையின் ரணங்களை வானமே பார்க்கிறது.
வற்றிய உடல்களை விரித்தும் ஒடுக்கியும்
சுவாசம் பிடிவாதமாய் ஒட்டி அசைக்கிறது.
அக்கினிச் சிறையுடைக்கும் மீட்பர்களுக்காக
மானுட உய்வு காத்துக் கிடக்கிறது.
எங்கள் முகாரிகளே முரசுகளாக மாறும்.
மௌனித்துக் கொண்டவர்களே!
இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள்.
பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும்.
எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு,
ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து,
இந்த இனஅழிப்பிற்கு,
'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்று
முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள்.
இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது.
வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்...
நாங்கள்தான் முட்டாள்கள் போலும்.
எங்கள் ஒப்பாரிகள்...
உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி,
ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள் என்பதை சில சமயங்களில்...
பிறழ்வுக்கு உள்ளாக்கிவிடும் தவறைச் செய்கிறோம்
தன்கையே தனக்குதவி எனும் இனம்
பிறன் காலடியில் உயிர்வாழ, கையேந்த சபிக்கப்பட்டது எப்படி?
காலங்காலமாக வாழ்ந்த மண்ணில்,
எத்தனை காலமாக ஏதிலிகளாகக்கப்பட்டு,
இனஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுகச் சிறுக சீரழிக்கப்பட்டோம்.
எவரேனும் எங்கள் வாழ்வைப்பற்றிக் கவலையுற்றுக் குரல் தந்தீர்களா?
இல்லையே....
உங்கள் நாட்டில் நீங்கள் இன்னொரு இனத்தால் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று
அறியவில்லை என்று எங்கள் காதுகளில் பூச்சுத்தாதீர்கள்;.
இப்போது நாளாந்தம் எம்மண்ணில்,
துடிக்கத் துடிக்க சாவணைக்கும் உறவுகளின் எண்ணிக்கையை,
ஏதோ உணவுப் பயிருக்கு தீங்கு செய்யும்
பூச்சி, புழுக்களைக் கொல்லும் கணக்கில் போட்டுவிட்டதுபோல்,
துளியும் மனவருத்தமின்றி மெத்தனமாக கதைக்கிறீர்களே தவிர,
அதிலும் கொஞ்சம் நிவாரணப்பணம் தந்துதவ நினைக்கிறீர்களே அன்றி,
நாளாந்தச் சாவுகளையும்,
கைகால் இழப்புகளையும்,
மனநலம் குன்றுவதையும்....
உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று
யாரும் அறைகூவல் செய்யாமல் மழுப்புகிறீர்கள்.
அப்படியாயின்,
எங்கள் தாயக மண்ணில் நடைபெறும் இனஅழிப்பு என்பதை
நீங்கள் எல்லோரும் மௌனத்தின் மூலம் அங்கீகரிக்கின்றீர்களா?
அனைத்துலகமே! போதும்..
உங்கள் மனித காருண்யத்தை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள்
ஈழத்தமிழர்களாகத்தான் இருக்கமுடியும்.
எங்களுக்கான தொப்புள் கொடி உறவுகள்தான்,
எமக்காக தம் வாழ்வைக் கருக்கி நாளாந்தம் தமை வருத்தி வாழ்கிறார்கள்.
அவர்களின் கூக்குரல் கூடவா எவருக்கும் கேட்கவில்லை.
உலகமெல்லாம் தாவரம், பறவை, விலங்கு என்று
எல்லாவற்றையும் பாதுக்காக்க திரளுங்கள்.
மனிதர்களை அதுவும் ஈழத்தமிழர்களை சீ விட்டுவிடுங்கள்.
எங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம்.
சரி எங்களை அழிக்கச் சிங்கள அரசுக்கு போர் ஆயுதங்களையாவது
வழங்காமல் விடலாம் அல்லவா.
ஐயோ..!! நாற்காலி மனிதர்களே!
நாறும் பிணமாகவும், நாயிலும் கேவலமான வாழ்வானதாகவும்
எங்கள் வாழ்வின்று நலிந்து கிடக்கிறது.
எங்கள் வலிகள் உங்களுக்குப் புரியப் போவதில்லை.
நீங்கள் எவரும் புரிய முயற்சிக்கப்போவதும் இல்லை.
தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கென்றால் தெரியும் அதன் வேதனை.
உலகே!
ஒரு கண்ணில் வெண்ணையும்,
மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவிக் கொண்டிருக்கும்
உன் போக்கு மாறும் காலம் வரும்.
எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.
எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும்.
வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே
விலைமதிப்பில்லாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம்.
சர்வதேசம் கண்ணிழந்த கதையை,
ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும்.
இன்று உலகெங்குமாக வாழும் தமிழ் உறவுகளின்
கண்களில் வழியும் கண்ணீரே
தாயகம் மீட்கும் மறவர்களின் காப்பரன் என்று
காலம் உணர்த்தும் பாடத்தை இனிவரும் போராட்டங்கள்
முன்னுதாரணம் ஆக்கிக் கொள்ளும்.
யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ...
வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.
தென்னகம் தந்த காலப்பிழம்பு
மண் தவப்பேறே!
மானுடத் திருவே!
விடுதலைச் சீற்றம் வெடித்த பிழம்பே!
தன் நிலை எரித்த தாய்மைச் செறிவே!
தென்னகம் கொண்ட கொள்கைக் குன்றே!
என்னகம் தொட்டு எழும் மொழிமெட்டில்
உன்னடி நோக்கி என்தலை வணங்கும்.
உன் இருப்புக்குள் எவ்வளவு நெருப்பு உண்டாய்,
கண்டு கொண்டோம்.
கந்தகம் தீய்க்கும் எங்கள் வாழ்வை
நெஞ்சகங்கொண்டு நெருப்பாய் ஆனாய்.
எம்மினம் காக்க தென்னகம் தந்த காலப்பிழம்பே!
தொப்புள் கொடியின் தாய்மைப் போரில்
உத்தம தத்துவம் சொன்னவனே!
நடுவன் அரசை நடுவீதிக்கழைத்து
நியாயம் கேட்ட நீதிமானே!
நலிந்திடாத் தமிழுனை நாளும் பாடும்.
ஈழவர் வாழ்விற்கு
இளநகை கேட்ட அன்புத்தம்பி முத்துக்குமாரா!
எத்தனை ஆயிரம் தோழரைத் தந்தாய்.
உண்மையின் வடிவை உணர்ந்திடச் செய்தாய்.
நாங்கள் பாயிரம் பாடும் ஆலயக் கோட்டத்தில்
குடிபுகுந்த குட்டித் தேவனே!
உனைச் செத்ததாய் சொன்னர்.
சா உனக்கில்லை நீ சரித்திரம் அல்லவா.
நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்...
பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே!
இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம்.
ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்?
மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது?
மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும்
கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்?
கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும்,
கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்?
கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம்
செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே!
அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ
முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா?
அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நலிகிறது
கண்ணை மூடி நீ காணாது நிற்பது ஏன்?
கந்தகம் துப்பத் துப்ப நொந்தழுதோர் நாம்தானே!
வெந்துஅகம் விழிசுரக்க வேதனைகள் சுமந்தோமே!
இந்த நிலம் வந்தபின்னால் அந்த வாழ்வு மறந்தோமா?
குந்த நிலம் கண்டவுடன் கூன் முதுகு கொண்டோமா?
உன் காலுதைப்பை தன்மேல் காலமெல்லாம் தாங்கியள்
நீ கல் தடுக்கி விழுந்தாலும் காயத்தில் ஏந்தியவள்.
சூழ் கொண்ட கருவறைதான் வெவ்வேறு என்னினமே!
சேர்த்தணைத்து சுமந்தது ஈழத்தாய் மடிதானே!
வசந்தச் சோலையிலே வளவுக்குயில் பாடியதும்,
இசைந்த தெங்கிடையே தென்றல் நடம் ஆடியதும்,
கண்ணுரசும் அலையிடையே கயல்கள் விளையாடியதும்,
எண்ணிப் பார்த்திடுக என்னினமே! என்னினமே!
வாயொடுக்கி, மெய்யொடுக்கி விதியென்று கிடவென்று
வந்தோரும் போனோரும் தந்தனத்தோம் போடுகிறார்.
நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்
எம் தாயொடுக்கல் காணாமல் தீர்வெழுத முனைகின்றர்.
எம்மினத்தின் வேதனையை ஏன் அறியாதிருக்கின்றார்?
எண்திக்கும் எவரிருந்து எம் கழுத்தை நசிக்கின்றார்?
கண்ணில் வெண்திரையா? காரணங்கள் பலதிசையா?
எம்மிறக்கை துண்டித்து எது செய்ய நினைக்கின்றார்?
ஈழத் தமிழினமே!
உன்னி மூச்செடுத்தால் உலகெம் திசை திரும்பும். - தாய்
மண்ணுக்கு வலுவூட்ட வல்லமைக் குரல் செய்க!
எமைப் பிள்ளையெனப் பெற்றதெண்ணி ஈழநிலம் பூரிக்கும்.
பின்னாளில் போற்றும் வரலாறும் வாழ்த்துரைக்கும்.
விழவிழ எழுகின்ற வேதம் என்பதெல்லாம்
அழகாக தமிழ் தொடுத்து அரங்கேற்றும் கவிகளுக்கா?
குலம் விளங்க வாழ்ந்தமண் கும்மிருட்டில் விழி கரிக்க
கோடை வசந்தத்தில் கூத்தாடி மகிழ்வதென்ன?
பொங்கு தமிழ் குலமே!
சொந்த உறவுக்குச் சோகங்கள் தருவதற்கா
உந்திக் கிளம்பாமல் உட்கார்ந்து கிடக்கின்றீர்?
முந்திச் செய் தவறால் வெந்தநிலை போதும்
பந்தி படுக்கை விட்டு எப்போது எழுந்திடுவீர்?
அன்னை திருமேனி அந்தரித்துக் கிடக்கிறாள். - எம்மினம்
நொந்து குலையவோ? வேரடி வெம்பி மனையவோ?
எழில்தரும் பனிமுகத்தின் ஈரமலர்களே!
கண்களில் தீ மூட்டுக! ஈழம் காத்திடும் பணி ஏற்றுக.
உலக வல்லாதிக்கத்தின் அவலம் உணராக் கோட்பாடுகளும், ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன.
மரணத்தை மீறி எழுகிறது எம்வாழ்வு
ஓ..மனிதமே!
இது ஈழத் தமிழினத்தின் இக்காலக்கதை
கண்ணெதிரே இனவாதம் கடித்துக் குதறும்
ஓரினத்தின் குருதி தோய்த்தெழுதும்
எழுதுகோல் கொந்தளிக்கும் உண்மைக்கதை
உலக வல்லாதிக்கத்தின்,
அவலம் உணராக் கோட்பாடுகளும்,
ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக
எம்மீது எழுதப்படுகின்றன.
தொடரும் போரும்,
கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும்
பொருத்தமில்லாச் சமன்பாடுகளும்
எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன.
எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும்
மறுக்கப்படுகின்றன.
குரல்கள் ஒடுக்கப்படுகின்றன
ஒரு இனவாதத்தின் படர்கை
எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது.
முற்றுப் பெறாத கால நீட்சியில்
எம்மினத்தின் வாழ்வு ஏளனத்திற்குள்ளாகிறது.
வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம்
உசுப்பி எம்மை உக்கிரப்படுத்துகிறது.
ஒடுக்குதற்கெதிரான நிமிர்வு
வியாபித்து எங்கும் நிறைகிறது.
விடுதலைச் சுடரின் ஒளியில் சுதந்திர வாசனையை
எம் வாசல் நோக்கி அள்ளி வருகிறது காற்று.
அற்றதொரு பொருளுக்குள் புதையும் சுயம்
அடங்காச் சினமாக அவதாரம் எடுக்கிறது.
வெறுமையும் விரக்தியும் வைரம் பாய
மரணத்தை மீறி எழுகிறது எம்வாழ்வு.
ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக்கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது.
உயிர் முட்டி எழுகிறது உணர்வு.
காதுமடலை உராயும் காற்றின் வழியே
உங்கள் மூச்சின் இளஞ்சூடு படர்கிறது.
அருவமாய் வந்தெங்கள் அருகிருக்கிறீர்கள்...
உப்பேரி கரையுடைக்கும் எங்கள் விழிகளுக்குள்
உக்கிர நெருப்பை தேடுகிறீர்கள்.
உமக்கான மொழியெடுத்து
உம்மோடு பேச முடியாது, ஊமையாகி,
தலை குனிந்தே உங்கள் முன்
குற்றக் கூண்டேறி நிற்கிறோம்.
வெற்று வார்த்தைகளால் கவிபாட முடியவில்லை
பொய் கலந்தென் புனைவிருப்பின்
சத்திய நெருப்பு சுத்தி வந்து தீய்க்கிறது.
கார்த்திகை 27, 1982
முதல் மாவீரன் மண்ணில் சரிந்து
இன்றுடன் ஆண்டு 27 ஆகிவிட்டது.
காலநதி என்னவோ ஈழவர் வாழ்வைக்
கரைத்தபடி வேகமாய் நகர்கிறது.
இளமை தேய்ந்து, முதுமை எங்கள்
காதோரக் கேசங்களில் கடிதம் எழுதுகிறது.
கார்த்திகைத் திங்கள் என்றாலே
கனக்கும் இதயத்திற்கு
கல்லறைப் பாடல்தான்
உயிர் உந்தும் விசையை
உள்ளெடுக்க வைக்கிறது.
ஒவ்வொரு வரிகளுக்குள்ளும்
உயிர்துளிகள் உருகி
உறுதி மொழி எடுக்கும் வரை
ஓர்மமின்றி நலிகிறது.
உங்களைத் தரிசிக்கவரும் ஒவ்வொரு கணமும்
நேற்றைய நாட்களின் தோழமைச் சிரிப்பும்,
எங்கள் மீதான உங்களின் நம்பிக்கைத் துளிர்ப்பும்
ஆழப்பரவி எங்கள் சுயத்தை எரிக்கின்றன.
ஆலய தரிசனம் ஆன்மாவிற்கு நிம்மதி
அதிலும் உன்னத தோழர்களின்
உயிர்ப்பூவனத்தில்அந்தி சாய்கையிலே
அமர்தலே பேரின்பம்.
தேவரீர்!,
உங்கள் கோபுர வாசலுக்குள்
பாதம்பதிக்க வழியற்ற
புலம் பெயர்வின் பெருவாழ்வு...
அருவருப்புப் பிண்டம்போல்
அகத்தில் நெளிகிறது.
உங்கள் உயிர்க்கொடையின் செறிவு
உள்ளப்புண்களில் அமிலம் அள்ளிச் சொறிகிறது.
ஒவ்வொரு வருடமும்
ஏதோ புலம்பலுடன் உங்களைக் காணவந்து,
ஆவி துடித்திருக்கும் உங்களின்
ஆவலை முடக்கிவிட்டு,
'மறுபடியும் வருவோம்,
தாயக விலங்கறுத்த தேமதுரச் சேதி கொண்டு
தித்திக்க பேசுவோம்" என்றும் வாக்களிக்கிறோம்.
அடுத்த வருடம்...
இன்னொரு சாட்டு சொல்லி
உங்கள் வாய்களுக்குப் பூட்டுப்போட்டுப்
புறப்பட்டு விடுகிறோம்.
ஈழவர் விதி இதுவென்றாகிக் கிடக்கிறது.
இன்றும் வந்துள்ளோம்...
மௌனப்பதில்களை மட்டுமே சுமந்தபடி,
வல்லாண்மைச் சதி எங்கள்
வாழ்வு அள்ளிக் கருக்குவதை
உணர்வீர்கள் என்ற பெரு நம்பிக்கை
கொண்டே உங்கள் முன்றலில் கூடியுள்ளோம்.
ஏக்கத்தோடு பார்க்கும் உங்களிடமே
நிமிர்ந்தெழும் சக்தி கேட்க
செங்காந்தள் அள்ளிவந்து
சிரம் தாழ்த்தி நிற்கிறோம்.
எங்களைப் பார்த்து ஏமாற்றம் அடையாமல்
புன்னகைப் பூவெறிந்து நிற்கிறீர்களே,
இன்னும் அறியாமையில் துவளும் எங்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு பற்றுதலா?
ஏளனப்பட்டதாய் ஈழவள் ஆகலாகாதென்று
அக்கினிச் சிறகெடுத்த அவதார புரசரே!
இயலாமை எங்களின் இருப்பாகக் கூடாதென்று
கல்லறை மேனியராய் கருக்கொண்டோரே!
பெருந்தாய்த் தமிழகத்தின் உறவுக்கொடியெலாம்
அணிதிரண்டு எமை அரவணைக்கும் ஒரு செய்தி
இன்றுங்கள் காதுபாயும் முதல் மதுரம் ஆகிடுக.
களத்துலவும் தோழர்கள் கட்டாயம்
வெற்றிச் செய்தியோடு விரைந்தோடி வருவார்கள்.
கல்லறைத் தேவரீர்!,
உங்கள் ஏக்கத்தைத் தீர்க்கும் பெருவரம் பெற்றவர்கள்
நாங்களல்ல அவர்கள்தான். - எனினும்,
புலம்பெயர்வின் மோகத்தில் அள்ளுண்டு போகாமல்
இன்றுங்கள் முன்னிலையில்
மீண்டெழும் வரங்கேட்டு நிற்கிறோம்.
எங்கள் நெஞ்சக் கூட்டிற்குள்ளும்
ஆழப் புதையுண்டிருக்கும் விடுதலைப் பொறியை
உங்கள் மூச்சுக் காற்றில்
மூசும் எரிமலையாய் ஏற்றுக.
சாட்டுரைத்தே கேடுற்றர் தமிழச் சாதியென்று
எங்கள்சந்ததி சரிதம் எழுதக்கூடாது.
ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை
ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க
இனியும் எம்மால் முடியாது.
உங்கள் தாகம் தீர்க்காது ஊமைக் காயங்களுடன்
உமைவிட்டுச் செல்வது இதுவே இறுதியாகட்டும்.
அடுத்த வருகை உங்களைக் காணவெனில்
அன்னை திருமுடி தரித்த பின்னர்தான்.
இளைய தேவரீர்!
இன்றுங்கள் கோட்டத்தில் எடுக்கும்
உறுதிமொழி இதுதான்.
வீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே.
காரிருள் போர்த்தி நிலம்
கண்விழித்துக் காத்திருக்க,
கறுப்பு முகில் தான்கவிந்து
காணவென்று பூத்திருக்க,
ஆழிமகள் அணைக்கவென்று
ஆர்ப்பரித்து அலை எறிய,
வந்துதித்த ஆதவனே!
வாழிய நீ பல்லாண்டு.
புற்றீசல் மெட்டெடுத்துப்
புதுப்பாடல் இசைத்திருக்க,
புவி நனைத்து வர்ணமகன்
பன்னீரை வார்த்திருக்க,
நறுமலர்கள் வாடாத
நனிதிங்கள் கார்த்திகையில்
பிறப்பெடுத்த பெருமகனே!
வாழிய நீ பல்லாண்டு.
கிழக்கு முகம் சிரிக்க
எழும் ஒளியின் அடர்வே!
செம் பொன் அள்ளி
வீசிவரும் சூரியச்சுடரே!
இலக்கெடுத்துச் சுயம்
ஒடுக்கும் மானிடத்திருவே!
இலங்குபுகழ் தலைமகனாய்
வாழிய நீ பல்லாண்டு.
தாயகத்தை நெஞ்சில்
ஏற்ற தலைமைவேளே!
தனித்துவப் பண்பாட்டு
ஒழுக்கநெறிக் கோவே!
வாயோதும் நாமம் உறை
வல்லவர் வடிவே!
வரும் பகை வென்று,
வாழிய நீ பல்லாண்டு.
சீர் பூத்த படைசெய்யும்
சிருஸ்டி பிரம்மனே!
சின்னச் செம்மழலை
சிரம் காக்கும் தேவனே!
ஊழிப் பகை அழிக்கும்
உக்கிரச் சிவனே!
உலமெலாம் உனை வாழ்த்த
வாழிய நீ பல்லாண்டு.
வீரத்தின் வனப்பிற்கு
உவமை தந்த வரலாறே!
வாழ்வெடுத்துத் தமிழ் நிமிர
வழி சமைத்த வல்லமையே!
காலமகள் எமக்களித்த
காவியப் பெருந்தேவே!
கவி நெய்து வாழ்த்துகிறோம்
வாழிய நீ பல்லாண்டு.
நீர் ஊற்றி நிறைத்தாலும், பாலுற்றும் ஒளி நிறைத்து பனிநிலவு அணைத்தாலும், கார்காற்று மேனியதைத் தழுவிக் குழைந்தாலும் அணையாது
என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே!
புன்னகை அழகே! பொதிகையின் அரசே!
விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே!
நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக.
முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து
இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை,
மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த்து,
தள்ளாடி நான் விழுந்தால் தாங்கி இரசித்தவளை,
சித்தமெலாம் எனையாளும் சித்திரையின் நாயகியாம்
உலக சக்தியவள் பெருந்தாயை,
நான் செத்தழிந்து போனாலும் என் சாம்பல்கூடத் தலைவணங்கும்
மாவீரத் தோழர்களை, பத்திரமாய் தொழுது,
எந்தன் தமிழுக்கு நிமிர்வு தந்த
தானைத் தலைவன் வழியதைச் சிரமேற்று,
உயிர்ப்பின் வலி உரைக்க,
எனை வனைந்த என்குருவிற்குத் தலைவணங்கி,
தாயின் மணிவயிற்று பசியென்னும் தீயணைக்க
சிறங்கை பொருள் கொடுக்கும் செந்தமிழ உறவுகளே!
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
இது புதுவரவு.
கல்லி எடுக்கவும், களைகள் பிடுங்கவும்,
நன்னீர் பாய்ச்சி, நற்பயிர் வளர்க்கவும்
களத்து மேடு தேடிக் கால்கள் வந்துள்ளன.
கார் சூழ்ந்த பொழுதிடையே கவிவிளக்கு ஏற்றியுள்ளோம்.
ஒளி காட்டும் திசை நல்ல வழிகாட்டும் உணர்ந்திடுக.
ஏர் பூட்டி வந்துள்ளோம்.
விடுதலைத் தேரிழுக்க ஊர்கூட்ட வந்துள்ளோம்.
கார்காற்றில் தீ மூட்ட கவி நெருப்பேந்தி,
இக்களத்து மேட்டிடையே..
கண்ணீர் வைரங்களில் கனல் ஏற்றி வந்துள்ளோம்.
ஆர் ஆற்றுவார் எங்கள் ஆழ்மனதின் தீப்பிழம்பை?
நீர் ஊற்றி நிறைத்தாலும்,
பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும்,
கார் காற்று மேனியதைக் தழுவிக் குழைந்தாலும்,
அணையாது அணையாது எரிகிறது என் தாய்மூச்சு.
எந்தையும் தாயும் கூடிய எம்மண்ணிலே
எத்தர்கள் நுழைந்தது எப்படி?
கந்தகம் தினம் தினம் காற்றிலே பூத்து
காலனை அழைத்தது எப்படி?
வந்தேறு குடியென்று வந்தவன் விரட்டிட
வேர் நொந்து போனது எப்படி?
அந்தரித்து அந்தரித்து அவலத்தைச் சுமந்து
அகிலத்தில் பரந்தது எப்படி?
வந்தரை ஏற்று விருந்தோம்பி நின்றதில்
வந்தது தந்தது வேதனை.
எந்தையர் விரட்டியே எம்நிலம் பிடித்திட
திணித்தனர் இனவாதத் தீதினை.
சிங்களத்தரசுகள் செந்தமிழ் தீய்த்ததில்
கந்தகம் விழுந்தது எம் கைகளில்.
நின்றாடும் துணிவின்றி நம் வட்டம் சிறுத்ததனால்
அந்தரித்துலகினில் தலைவதாய் வாழ்வணை.
முடிந்ததா நம்மால்....
வேர் பிடுங்கி எங்களை வேற்றுநிலம் நட்ட பின்பும்..
ஊர் நினைப்புதானே உள்ளுக்குள் எரிகிறது.
அன்னை திருமேனி அந்தரிக்க அந்தரிக்க
கண்ணை அயரவிட எண்ணங்கள் மறுக்கிறதே...
போர் மூசும் பெருங்காற்றில் ஊர்கிழித்து விழுகிறதாம்
ஒரு மூச்சில் நாற்பது செல்கள்.
கார் கிழித்து வான் வெளியில் கரணங்கள் போட்டு,
வண்டி பருத்தவரும், வாய் முகப்பு நீண்டவரும்
குந்தி எழும்பினாலே...
ஆழக் கிணறு வெட்டும் வேலை மிச்சமாம்.
நச்சரவம் ஒருபுறம்,
நாசத்திரவம் மறுபுறம்...
எத்தனை நாள் தாங்குவர் எம் உறவுகள்?
காட்டு வெளிகளிலே காஞ்சோண்டி செடியிடையே,
நாயுருவி முத்தமிடும் நாணற்புதரிடையே,
பாறிச் சரியுதடா பாசத் தோள்கள்.
ஈரவயிற்றுள்ளே கோரப்பசி விழிதிறக்க,
பித்தச் சுனையிடையே எரிமலைகள் குமுறுதடா.
சேறெடுத்த மண்ணிடையே பாய் விரிக்க முடியுமா?
தோள் சாயும் இடந்தானே படுக்கையாய் கிடக்கிறது.
ஈரவிழிகளெல்லாம் இலக்கேந்திக் கிடக்கின்றன.
ஓரவிழி கசிய....
தூரத்து வெளிகளிலே துயர் துடைக்கும் உறவுண்டு எனும்
பாரிய நினைவோடு உயிர் வலிக்க நிமிர்கின்றன.
ஓரவிழி கசிகிறதா?
ஈரக்குலை அசைய உள்ளிழுக்கும் மூச்சில்
ஆழத்து அகம் விரித்து அழுகை எழுகிறதா?
உறவுக் கொடியெல்லாம் ஓடிவந்து அணைப்போமென்று
ஊர் போகும் காற்றிடையே உறுதி மொழி சொல்லிவிட
பாவி மனம் கிடந்து பாடாய் படுகிறது.
வாருங்கள்.....
ஆவி துடிக்கும் இக்கவி கேட்டு தாவி உறவெல்லாம்
நாமுள்ளோம், நாமுள்ளோம் என்றுரைத்தால் போதும்.
எம்மினம்.... போரின் அனலிடையே வேகாது.
விதியென்று சாகாது.
எண்திக்கு உறவுகளும் வேர் மடிக்கு நீர் பாய்ச்சும்
எனும் வீச்சில் மூசியெழும்.
தற்காப்பு நிலையென்று உட்கார்ந்த நிலை உடைத்து
உக்கிர மூச்செடுத்து உலைக்களத்தில் நிமிரும்.
படலைக்குள் நின்றாடும் யுத்தச் சாத்தானைப்
பந்தாடிக் காலிடையே பிழியும்.
ஊர் போகும் காற்றிடையே.....
'நாமுள்ளோம் அஞ்சற்க.. நாமுள்ளோம் அஞ்சற்க' எனும்
உறுதி மொழி சொல்ல... உரத்து கூறுக.
நாமுள்ளோம் அஞ்சற்க..... நாமுள்ளோம் அஞ்சற்க.
தாயின் மடியில் தமிழ் பால் உண்ட கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம்
கருணைப் பெருங்கடலே!
கன்னல் சுவையூறும் தமிழ் பூத்த திருநாடே!
உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே!
திண்மை கொண்டெழுந்த உங்கள் திடல் தோளில்
சிறிது சாய்ந்து இளைப்பாறிக் கொள்கிறோம்.
தாயின் மடியில் தமிழ்ப் பாலுண்ட
கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம்.
வீசும் தமிழ் காற்றும், உணர்வின் அலையும்
தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வை ஆற்றும்.
உக்கித் தனிமரமாய் துயர் சுமந்த எங்களுக்கு
உயிர்ப்பின் கொடி பிடித்து அரவணைக்கும் உறவுகளே!
தெக்கும் உணர்விடையே உயிர்ப்பூ கசிகிறது.
தேம்பும் விம்மலொலி சிறிதடங்கிக் கிடக்கிறது.
பால் வாசம் வீசும் மார்பிடையே அணைத்தவளே!
பனித்த விழிகளால் பாசத்தைப் பொழிபவளே!
மனித்த பிறவியதன் மாபெரும் தத்துவத்தின்
தனித்துவம் காக்கும் மா.. தாய் நீயல்லவா.
தொப்புள் கொடி உறவு துணை வந்து நிற்கிறது.
தொய்வின்றி எம் பயணம் விடுதலைக்காய் தொடரும்.
அர்ப்பணிப்பு எங்களதாய், அரவணைப்பு உங்களதாய்
காலமகள் இணைத்துவிட்டாள்...
சற்றுக் களிக்கின்றோம் உறவுகளே.
வள்ளுவன் வாழ்ந்த வானளந்த தமிழகமே!
உள்ளிருந்து எழுகின்ற எம் நன்றிக்கு அளவில்லை
உப்புக் காற்றுரசும் ஊமைக்காயங்களுடன்
அக்கினி வீச்சுகளை மென்றுமென்று நீர் குடித்தோம்.
கோடிக்கரையிருந்து கொடியொன்று தெரியாதா?
வான்முட்டும் உறவுகளின் வல்லமைக் குரல் கேட்டு
வாரணம் வழி விடாதா?
ஆனமட்டும் ஏங்கியது நேற்றைய கதையாக, இன்று
நெக்குருகி கொஞ்சம் இளைப்பாறும் வரம் பெற்றோம்.
ஈரக்குலை பிழிய உயிர் இன்னும் துடிக்கிறது
காரணம் பலவுண்டு கடந்த காலம் நகைக்கிறது
பூரணப் பிரசவமே வேண்டும் எங்கள் வலிகளுக்கு
புன்னகையைக் கடனாக புதுப்பிக்க முடியாது.
தேமதுரம், பால், பழமும் தெவிட்டாத தெள்ளமுதும்
நாவுக்கு வாழ்வு தரும், நலத்திற்கு மீள்வு தரும்.
பாவியர் ஏவும் சாவுக்கு மாள்வு தர
பனிக்கும் உறவுகளே!.. பாரினில் வழி செய்க.
காலப் பெரு வெளியில் கடந்தவைகள் எத்தனையோ..
கண்ணில் நீர் வழிய, இழந்தவைகள் எத்தனையோ...
விழி கசியும் உறவுகளே!.. வாழக் கேட்கின்றோம்
வழி மறிக்கா நிலை ஒன்றை வனைந்து தருக.
காப்பினைத் தந்திடா உலகமும் விழிக்கட்டும் காப்புக் கரங்களால் துயர் துடை
எழு! எழு! பெண்ணே!! எழு எழு.
எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ
எழு! எழு! பெண்ணே!! எழு எழு.
காப்பினைத் தந்திடா... உலகமும் விழிக்கட்டும்
காப்புக் கரங்களால் துயர் துடை.
சாக்களம் மீதினில் சரித்திரம் பிறக்கட்டும்
ஆக்கப் பலத்தினை நீ படை.
களங்களில் நின்று கலிகளை முட்டும்
காரிகை வெல்லப்பலம் கொடு.
உளங்களை வென்று பூமகள் முன்றலில்
புலம்பெயர் பெண்ணென வளங்கொடு.
பிஞ்சினை பிய்த்தரை வஞ்சியை வதைத்தரை
வெஞ்சினம் கொண்டு அவர் நெஞ்சுடை.
நஞ்சினை அணிந்தவர் நாட்டைக் காப்பரின்
நெஞ்சுரம் ஊட்டும் ஆற்றல் படை.
கனல் விழி வீசு! கவிஞனின் கோல்கள்
கர்வம் ஏற்றி எழுதட்டும்.
புனலாய்க் கிடந்தவள் கனலாய்ச் சிவந்திட
காலம் காட்டிய பாதையிது.
எழு! எழு! பெண்ணே!! எழு எழு.
எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ
எழு! எழு! பெண்ணே!! எழு எழு.
கூன்படு முதுகுகள் கோணல் நிமிர்த்தக் கொற்றவைத் தமிழே! நற்றுணை பொங்கு
என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே!
புன்னகை அழகே! பொதிகையின் அரசே!
விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே!
நின்னடி பணிந்தேன்... தாயே!... என்னுளம் நுழைக!
கங்குல் கரைய, அதிகாலை வெளிக்க,
செங்கதிர் வீசும் சூரியன் சிரிக்க,
தங்களர் வலுவில் தமிழ்மண் துளிர்க்க
தாம் தீம் தோமென தமிழே பொங்கு!
எங்கனும் தமிழின் ஓசை சிறக்க,
ஏதிலி எனும் பேர் காற்றினில் பறக்க,
வங்கப் பரப்பதில் வரிப்புலி சிரிக்க
வண்தமிழ்கொடியே! வனப்புடன் பொங்கு!
மங்கல ஒலியில் மண்மகள் குளிர,
சிங்களச் சேனைகள் செருக்களம் சரிய,
அங்கையற்கண்ணிகள் அரியணை செய்ய
அன்னைத் தமிழே! அமிழ்தெனப் பொங்கு!
வான் புலிச் சிறகுகள் வல்லமை வகுக்க,
தேன்கவிராயர்கள் தீந்தமிழ் செதுக்க,
கூன்படு முதுகுகள் கோணல் நிமிர்த்த
கொற்றவைத் தமிழே! நற்றுணை பொங்கு!
ஈழவர் சேனை இருளது கிழிக்க,
காலர்கள் வேற்றிடம் கதறி ஒழிக்க,
வீழ்ந்தது பகையென முரசுகள் ஒலிக்க,
ஆளும் தமிழே அகிலத்தில் பொங்கு!
வேங்கைகள் மார்பினில் வாகைகள் சூட,
வெற்றித்திருமகன் மகிழ்ந்து உறவாட,
மாங்கனித் தீவுனுள் மகுடம் ஏற்கும்
மண்மகள் போற்றி என்மொழியே பொங்கு!
ஆண்டுகள் பலவாய் ஒடிந்தே கிடந்து,
மீண்டனர் தளையை மிதித்தே எழுந்து,
ஆண்டனர் தமிழச்சாதியென்றே
ஆவி சிலிர்த்திட அமிழ்தே பொங்கு!
வேரும், விழுதுமாய் வீரமண் மீட்பில்
ஏறுபோல் வலுவும், வளமும் இணைத்து
பாரும் இக்கணம் திகைத்திடத் திகைத்திட
பைந்தமிழ் ஈழமே பொங்கு நீ பொங்கு!
கூறு கெட்டவர் கோட்டை ஆள்வதா?
ஊறு செய்பவர் எம் நாட்டை ஆள்வதா?
வீறுகொண்டு எழும் வேங்கை மூச்சிலே
தீர்வெழுதிடும் திறமையே பொங்கு!
கார் எழுதிடும் வாழ்வு விதியென
கவிந்த தலைகள் உயர்ந்து நிமிர்கவே!
போர்வலியது எம் ஊர் குதறவோ...?
தீர்வெழுதிட உலகின் திசைகள் எழுகவே!
ஈழமண்ணதில் கலிகள் பொங்குது
இளைய வேனில்கள் கனலில் வேகுது.
சாகத் துணிந்தவர் தீரம் இன்னமாய்
சமர்க்களங்களில் சரிதம் எழுதுது.
புலம் பெயர்விலே புரட்சி பொங்குக!
நிலத்தைக் காக்கும் நீட்சி பொங்குக!
விரித்த பூமியில் உரத்த குரலிலே
உரைக்கும் செய்தியில் உணர்வு பொங்குக!
கனத்த பொழுதுகள் கிழித்து எறிந்திட,
கவிந்த மாயைகள் விலகிக் கலைந்திட,
தனித்த வாழ்விலும் தமிழர் மிளிர்ந்திட
தாயே! தமிழே!! பொங்கு நீ பொங்கு!
குருதி பெருக்கெடுக்கும் இறுதி வேண்டுகை.

உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின்
வேர்மடிக்கும் தாய்மடியே!
உறுதி குலையாத உரம் அன்றுதந்து,
விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே!
ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக்
காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே!
எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ?
வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை
வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம்.
ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும்,
பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும்,
கோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும்,
ஈர்ப்பு இருக்கிறது,....
எனினும் இப்போது முடியவில்லை.
கண்ணீர் பெருக்கெடுக்க,
உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,
கூப்பிடு தொலைவில்த்தானே...
எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது.
ஆற்ற ஒரு நாதியின்றி, - எம்மினத்தின்
அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,
அம்மா!.......உன் கையணைக்கும் தூரத்திலல்லவா...
எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது.
வாதைகள் பல சுமந்து,
கந்தகக் காலனின் குடியிருப்பில்,
குடி சுருங்கி,
கொப்பளிக்கும் குருதிவழி குலைசிதற,
இடிதாங்கி, இடிதாங்கி.... அடிதாங்கும் நிலை கூட...
இன்னும் உன் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பதென்ன?
உன் விழிமணிகள் மீதமர்ந்த வெண்சவ்வா?
இல்லாவிடின் வேண்டா உறவென்ற விளங்காக் கொள்கையா?
கட்டாய வலி வந்து,
கால் அகட்டிக் கிடக்கையிலே
ஆடைச் சரிவிற்குள் அந்நியர்கள் பார்வை...
எங்கள் தொப்புள் கொடிக்கான தொடர்பந்தம் நீதானே....
எப்படித் தனிக்க விட்டாய்?
ஏதிலியாய் தவிக்கவிட்டாய்?
சாவின் விளிம்பினிலே,
கூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே,
ஆவி துடித்தெழுந்து...
தாவி அணைக்கும் தாய்மடி நீதானே!
வாரியணைத்து எம் புவியின்
வண்ணமுகம் பார் தாயே! - எவ்
வல்லமையும் உடைக்க முடியாத்
தாய்மைவேதம் நீதானே!
தாயே!......
குமுறும் எம் உள்ளக் கோபுரத்தை
வருடி எப்போது ஆற்றுவாய்
தனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும்
வலுவாய் தோற்றுவாய்
அம்மா!
இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!
பாராமுகம் வேண்டாம்.
வா!... பக்கத்துணையாய் இரு!
வேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம்.
எம் புவியின் பேற்று மருத்துவச்சியாய்
நீயே பிள்ளைக் கொடி அறு!
பெண் என்னும் பூகம்பம்

துணிவிருந்தால் துயர் அகலும்.
எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.
ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக
பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை.
போராளியான பெண் ஆணுக்கு நிகராக
அனைத்திலும் மிளிர்கிறாள்;
அல்லாதவள்……
அன்றாட அல்லல் மீள அல்லும்,பகலும் அவதியுறுகிறாள்.
புலம் மாறி வந்து புதிய கல்வி கற்றவர்கள்
பொல்லா விலங்குடைத்து புதிய பலம் பெற்றவர் நாம்
சேலைக் கடைக்குள்ளும் , சின்னத்திரைக்குள்ளும்
புதையுண்டு கிடக்கிறோமே…...
வேண்டாமென்று சொல்லவில்லை
வீறு கொண்டெழுந்து…..
வேகும் விதியோடு வாழ்விற்கேங்கும் எங்கள்
சோதரிகள் கண்ணீரை சிறிதேனும் துடைக்கலாமே.
அன்னையமும் அதை மேவும் பெண்ணியமும்
காலச்சுழிக்குள்ளே காணாமல் போனதுவோ?
வங்காலைச் சிறுபெண்ணின் வலி நிறைந்த கொலை அறிந்தும்
கண் காணா நிலையென்றா கனல் எடுக்க மறந்தோம்?
செந்தாழம் சிதைந்தாற்போல் சிறு தேகம் கிடந்தநிலை
செவ்விழிகள் மொய்த்து எங்கள் சிந்தைக்குள் புகவில்லையா?
பெண்ணியம் பேசி பெருமைகளைக் குவிப்போரே!
கண்ணிய வாழ்வுக்கேங்கும் ஈழப்பெண் கண்ணீரைக் களமேற்றும்!
கண்ணென்றும், கனியென்றும் கவி கொஞ்சில் கொதிப்போரே!
பெண்களைக்……காடை அங்கே கசக்குகிறான்.
காணாமல் கிடப்பது ஏன்?
அல்லைப் பிட்டிக்காய் அழுத கண்ணீர் காயவில்லை
ஆயிரம் அமைப்பிருந்தும் ஐ.நாவின் அம்பலத்தில் ஏறவில்லை
வங்காலை தொடர்கதையாய் வலியின் வரவெழுதி
எங்கால அடுத்த இடியென இதயத்தில் வலித்திருக்க
சொல்லி வைத்தாற்போல வல்லிபுன முன்றலிலே
வானரக்கர் குண்டு போட்டர்.
எண் எட்டின் பெருக்கத்தை எமன் தின்று சென்றான்.
கண்ணுற்றும், காற்றுவழி சேதி கேட்டும்
எண்ணிக்கையற்று எரிமலையாய் எழுந்தோம்….
பின் என்ன?
ஓர் மாதம் கடக்கு முன்னே மல்லாக்கப் படுத்துவிட்டோம்.
அன்றங்கு பட்ட அடி இன்றும் புற்றெடுத்து புரையோடிக்கிடக்கிறது.
மருத்துவப் பெயராலே சிங்களத்தின் மரணப்பரிசுபெற்ற
சின்னப் பெண்ணுடல் சிதையேற்ற முடியாமல் சீரழிந்து அலைகிறது.
ஆதிக்கக் கூப்பாடு அணுதினமும் ரணமாடி அன்னையர் விழியேறி
கண்ணீர்க் கடல் தோண்டுகையில்
பன்னீர்க்குளியலிட்டு பைந்தமிழ்க் கன்னியர்கள்
பக்குவமாய் உள்ளரென பாரெங்கும் பறையறைந்து
சங்கரி முதற்கொண்டு எட்டப்பச் சண்டாளர் சாட்சி சொல்வர்
நாங்களும் கேட்போம், திகைப்போம்…
பொய் என்று பொருமுவோம். பிறகொன்றும் செய்யமாட்டோம்.
மூலைக்குள் முடங்கி முகட்டு விட்டம் பார்ப்போம்
காலங்காலமாக இதுதானே நடக்கிறது.
நாளாந்த நகை மாற்றம். அலங்காரப் பொருட் தேட்டம்
தாயகத்தை விலத்திய தாயகமாய் உலவுகிறோம்.
கார்காலப் பொழுதுகளில் கன்னச் சிவப்பெழுதி
போர் மூண்ட பூமியின் பெருந்துயர் மாற்றவெண்ணா…மாதராய்
முல்லைச் சிரிப்போடு மிடுக்கோடு நடக்கிறோம்.
அக்கையும், தங்கையும் பக்கத்து வீட்டுப் படித்த தோழியும்
சீண்டும் பகை நடுவே….
மானத்தை வேண்டி தினம்தினம் தீக்குளிக்கும் பொழுதுகளில்
வரு…..மானத்தைத் தருமென்றாலே அதைப்பற்றிப் பேசுகிறோம்.
வாதையுற்ற இராணுவ வல்லுறவால் சீவன்விட்ட,
வலியுற்று மனம் நலிந்த பேதையான பெண்களுக்காய்
கோதையர்கள் தனியெழுந்து மேதினியை உலுக்கினோமா?
முக்காடு போட்டுக் கொண்டு பெண் என்னும்
முகம் தொலைத்து முடங்கி விட்டோம்.
துணிவிருந்தால் துயர் அகலும்.
எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.
ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக
பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை.
எச்சரிக்கை மடல்
மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும்,
தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும்
தயவு செய்து மேற்கொண்டு,
இக்கவியின் இரத்த ஓடையை
இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்!
ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில்
தேசத்து ஆன்மா துடிக்கிறது.
நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது.
உந்தும் வலு உறுதியாக வேண்டும்.
ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம்
வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது.
பனிக்குடம் உடைந்தபின்,
முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால்
எல்லாமே உறைந்து போகும்., ......உலர்ந்தும் போகும்.
வலியின்றி வளர்ச்சி இல்லை.
வலுவின்றி வலியைச் சந்தித்தால்
பலவீனம் பாயில் கிடத்தும்.
வலுவினூடே வலியைச் சந்தித்தால்
நலிவு நாணி ஓடும்.
இருந்து வியாக்கியானம் பேசும் மணித்துளிகள்
வலி வளர்க்கும் வேறொன்றும் செய்யாது.
பந்தமாய் ஆவதற்குப் பலவீனம் வாசலோரம்
முண்டியடித்து நிற்கிறது.
அதை ஊளையிட்டு ஓடவைத்தல் என்பது
உந்தும் வேகத்தில் இருக்கிறது.
உயிர்ப்பின் வலியும், உயிர்ப்பின் ஒலியும்
பிறப்பின் வாசலிலே பின்னி நலிகிறது.
வலியை ஒழிப்பதும், ஒலியை வளர்ப்பதும்
எம் இருப்பின் இயல்பில் இறைத்துக் கிடக்கிறது.
உந்தூ!
இல்லாவிட்டால் மூச்சுத் திணறும்
இத்தனை காலம் எத்தனை இழந்து...
வளர்த்த திரு இது.
முந்நூறு நாள் வளர்ந்த முத்தல்ல,
60 ஆண்டுகளாய் அவதியுறும் வலியில்
தமிழினம் சுமந்த கருவில் வளர்ந்த தெய்வசிசு.
தெய்வ சிசுவின் பிறப்பையே மறுக்கும்
பிசாசுத்தனங்கள் புளுகுக்கதைகள் அல்ல - அவற்றை
நிசத்தில் நாமும் தரிசிக்கும் நிகழ்காலம் இது.
உலகும் வலுவை நோக்கியே தலைவணங்கும் என்பது
வரலாறுகள் உணர்த்தும் பாடம்.
எம் வலிக்கு மருந்து எம்கையில்,
மண்டியிட்டாலும் மாற்றார் எமக்குதவார்.
களமும், புலமும் கைகோர்த்தே...
உந்தும் பெருமூச்சை உருவாக்கவேண்டும்
வலுவும், வளமும் இணைவதில்
வரலாற்றின் கதவுகள் திறக்கும்.
எடுக்கும் கைகள் கொடுக்கப் பணிய,
உந்தும் வலு உச்சமடையும்.
பிறப்பின் வாசல் விரிவடைய
தெய்வத்திரு கண் விழிக்கும்.
இதற்குப் பின்னும் காலந்தாழ்த்தல்
என்னையும், உன்னையும் இழிவாக்கும்.
புரிவாயா?