Saturday, October 24, 2009

நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்...


பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே!
இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம்.

ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்?
மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது?
மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும்
கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்?

கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும்,
கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்?
கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம்
செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே!

அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ
முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா?
அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நலிகிறது
கண்ணை மூடி நீ காணாது நிற்பது ஏன்?

கந்தகம் துப்பத் துப்ப நொந்தழுதோர் நாம்தானே!
வெந்துஅகம் விழிசுரக்க வேதனைகள் சுமந்தோமே!
இந்த நிலம் வந்தபின்னால் அந்த வாழ்வு மறந்தோமா?
குந்த நிலம் கண்டவுடன் கூன் முதுகு கொண்டோமா?

உன் காலுதைப்பை தன்மேல் காலமெல்லாம் தாங்கியள்
நீ கல் தடுக்கி விழுந்தாலும் காயத்தில் ஏந்தியவள்.
சூழ் கொண்ட கருவறைதான் வெவ்வேறு என்னினமே!
சேர்த்தணைத்து சுமந்தது ஈழத்தாய் மடிதானே!

வசந்தச் சோலையிலே வளவுக்குயில் பாடியதும்,
இசைந்த தெங்கிடையே தென்றல் நடம் ஆடியதும்,
கண்ணுரசும் அலையிடையே கயல்கள் விளையாடியதும்,
எண்ணிப் பார்த்திடுக என்னினமே! என்னினமே!

வாயொடுக்கி, மெய்யொடுக்கி விதியென்று கிடவென்று
வந்தோரும் போனோரும் தந்தனத்தோம் போடுகிறார்.
நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்
எம் தாயொடுக்கல் காணாமல் தீர்வெழுத முனைகின்றர்.

எம்மினத்தின் வேதனையை ஏன் அறியாதிருக்கின்றார்?
எண்திக்கும் எவரிருந்து எம் கழுத்தை நசிக்கின்றார்?
கண்ணில் வெண்திரையா? காரணங்கள் பலதிசையா?
எம்மிறக்கை துண்டித்து எது செய்ய நினைக்கின்றார்?

ஈழத் தமிழினமே!
உன்னி மூச்செடுத்தால் உலகெம் திசை திரும்பும். - தாய்
மண்ணுக்கு வலுவூட்ட வல்லமைக் குரல் செய்க!
எமைப் பிள்ளையெனப் பெற்றதெண்ணி ஈழநிலம் பூரிக்கும்.
பின்னாளில் போற்றும் வரலாறும் வாழ்த்துரைக்கும்.

விழவிழ எழுகின்ற வேதம் என்பதெல்லாம்
அழகாக தமிழ் தொடுத்து அரங்கேற்றும் கவிகளுக்கா?
குலம் விளங்க வாழ்ந்தமண் கும்மிருட்டில் விழி கரிக்க
கோடை வசந்தத்தில் கூத்தாடி மகிழ்வதென்ன?

பொங்கு தமிழ் குலமே!

சொந்த உறவுக்குச் சோகங்கள் தருவதற்கா
உந்திக் கிளம்பாமல் உட்கார்ந்து கிடக்கின்றீர்?
முந்திச் செய் தவறால் வெந்தநிலை போதும்
பந்தி படுக்கை விட்டு எப்போது எழுந்திடுவீர்?

அன்னை திருமேனி அந்தரித்துக் கிடக்கிறாள். - எம்மினம்
நொந்து குலையவோ? வேரடி வெம்பி மனையவோ?
எழில்தரும் பனிமுகத்தின் ஈரமலர்களே!
கண்களில் தீ மூட்டுக! ஈழம் காத்திடும் பணி ஏற்றுக.

No comments:

Post a Comment